1 யோவான் 3:1-24
1 யோவான் 3:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்பட பிதா எவ்வளவு பெரிதான அன்பை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்திருக்கிறார். உண்மையாய் நாம் அவரின் பிள்ளைகளே! உலகம் நாம் யார் என்று அறியாதிருப்பதற்கான காரணம், உலகம் இறைவனை அறியாதிருப்பதே. அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம். அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான். பாவம் செய்கிற எவரும் மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள்; ஏனெனில், மோசேயின் சட்டத்தை மீறுதலே பாவம். ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படியே கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை. ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவனோ, கிறிஸ்துவைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை. அன்பான பிள்ளைகளே, ஒருவனும் உங்களை வழிவிலகப்பண்ணுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கிறவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல, நீதியுள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பாவம் செய்கிறவனோ, பிசாசுக்குரியவனாகவே இருக்கிறான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துகொண்டே இருக்கிறான். ஆனால் பிசாசின் செய்கைகளை அழிப்பதற்காகவே இறைவனின் மகன் தோன்றினார். இறைவனால் பிறந்த எவரும், தொடர்ந்து பாவம் செய்யமாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து, அவனுள் குடிகொண்டிருக்கிறது. அவன் இறைவனால் பிறந்திருப்பதினால், தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருக்க முடியாது. இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும்: இவ்விதமாகவே நாம் அறிந்துகொள்கிறோம். நீதியைச் செய்யாத யாரும் இறைவனுக்குப் பிள்ளைகள் அல்ல; தனது சகோதரனில் அன்பு செலுத்தாத யாரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல. நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கிறது. காயீனைப்போல் இருக்கவேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலைசெய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலும் அவன் அப்படிச் செய்தான். எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக்குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள். நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அன்பாயிராத எவரும் மரணத்திலேயே இன்னும் இருக்கிறான். தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இவ்விதமாகவே, அன்பு என்ன என்பதை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்: இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததின் மூலமாக நாமும் நமது சகோதரருக்காக அல்லது சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். யாராவது உலகப்பொருட்கள் உடையவனாயிருக்கையில், தனது சகோதரன் அல்லது சகோதரி கஷ்டத்தில் இருப்பதைக் கண்டும், அனுதாபம் கொள்ளாதிருந்தால், அவனில் இறைவனுடைய அன்பு இருப்பது எப்படி? அன்பான பிள்ளைகளே, நாம் வார்த்தையிலும் பேச்சிலும் மட்டும் அன்பாய் இருக்கிறவர்களாயிராமல், செயல்களிலும் சத்தியத்திலும் அன்பை காட்டுவோமாக. நாம் சத்தியத்திற்கு உரியவர்கள் என்று அறிவதும், இறைவனுடைய முன்னிலையில் நம்முடைய இருதயங்களை ஆறுதல்படுத்திக்கொள்வதும் இவ்விதமே: நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாலும், இறைவன் நமது இருதயங்களைப் பார்க்கிலும், பெரியவராயிருக்கிறார் என்றும், அவர் எல்லாவற்றையும் அறிவார் என்றும், நம்மை ஆறுதல்படுத்திக்கொள்வோம். அன்பான நண்பரே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தாலும், இறைவனுக்கு முன்பாக நிற்க தைரியங்கொண்டிருக்க முடியும். மேலும் நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதினாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கிறதினாலும், நாம் கேட்கிற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம். இறைவனுடைய கட்டளை இதுவே: தமது மகனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்பதும், அவர் கட்டளையின்படி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதுமே. இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவரில் வாழ்கிறார்கள். அவரும் அவர்களில் வாழ்கிறார். இவ்விதத்திலேயே இறைவன் நமக்குள் வாழ்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்: அவர் நமக்குத்தந்த பரிசுத்த ஆவியானவராலே அதை அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை. நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது. சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே. என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள். நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து, அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)
பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான். ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும். அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார். தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை. துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். காயீனைப்போல இராதீர்கள். காயீன் தீயவனுக்கு உரியவனாக இருந்தான். காயீன் அவனது சகோதரனைக் கொன்றான். ஆனால் காயீன் அவனது சகோதரனை ஏன் கொன்றான்? காயீன் செய்தவை தீயனவாக இருந்ததாலும், அவன் சகோதரன் செய்தவை நல்லனவாக இருந்ததாலுமே. சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். நாம் மரணத்தை விட்டு, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்துவில் நமது சகோதரரையும் சகோதரிகளையும் நாம் நேசிப்பதால் இதனை அறிவோம். சகோதரனை நேசிக்காத மனிதன் இன்னும் மரணத்தில் இருக்கிறான். தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் கொலையாளி ஆவான். எந்த கொலையாளிக்கும் தேவன் தரும் நித்திய வாழ்வு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உண்மையான அன்பு எதுவென்பதை இவ்வாறே நாம் அறிவோம். இயேசு அவரது ஜீவனை நமக்காகக் கொடுத்தார். எனவே நாம் நமது ஜீவனைக் கிறிஸ்துவில் நமது சகோதரருக்காகவும் சகோதரிகளுக்காகவும் கொடுக்க வேண்டும். தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் பெறுகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக ஒரு விசுவாசி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏழையானவனும் தேவையான பொருள்கள் கிடைக்காதவனுமாகிய கிறிஸ்துவில் சகோதரனை அவன் பார்க்கிறான். தேவையானவற்றைப் பெற்ற சகோதரன் ஏழை சகோதரனுக்கு உதவாமலிருந்தால் பயன் என்ன? அவன் இதயத்தில் தேவனின் அன்பு இல்லை. எனது பிள்ளைகளே, நம் அன்பு வார்த்தைகளிலும் பேச்சிலும் மட்டும் இருக்கலாகாது. நம் அன்பு உண்மையான அன்பாக இருக்க வேண்டும். நாம் செய்கிற காரியங்களால் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் உண்மையின் வழியைச் சார்ந்தவர்கள் என்பதை இந்த வழியால் அறியலாம். நம்மைக் குற்றவாளிகளாக நமது இருதயங்களே உணர்த்தும்போது, நமது இருதயங்களைக் காட்டிலும் தேவன் உயர்ந்தவராக இருப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிவார். எனது அன்பான நண்பர்களே, நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராவிட்டால் நாம் தேவனிடம் அச்சமற்றவர்களாக இருக்கமுடியும். நாம் கேட்கிற பொருட்களை தேவன் கொடுப்பார். நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாலும், தேவனை மகிழ்வூட்டுகிற காரியங்களைச் செய்வதாலும் இவற்றைப் பெறுகிறோம். தேவன் கட்டளையிடுவது இதுவே. நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது தேவனின் கட்டளை ஆகும். தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். தேவன் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் எப்படி அறிகிறோம்? தேவன் நமக்களித்த ஆவியானவரால் நாம் அறிகிறோம்.
1 யோவான் 3:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.