1 யோவான் 2:6-12
1 யோவான் 2:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும். அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை. ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது. தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான். தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை. ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது. அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவான் 2:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே. மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான். பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவான் 2:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு மனிதன் தான் தேவனில் வாழ்வதாகக் கூறினால், அவன் இயேசு வாழ்ந்ததைப் போன்று வாழ வேண்டும். எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது. அன்பான பிள்ளைகளே, இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
1 யோவான் 2:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.