1 யோவான் 1:1-10

1 யோவான் 1:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வாழ்வுதரும் வார்த்தையாகிய கிறிஸ்துவைக்குறித்து நாங்கள் உங்களுக்குப் பிரசித்தப்படுத்துகிறோம். தொடக்கத்தில் இருந்த வார்த்தையாகிய அவரையே நாங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறோம். அவர் பேசுவதை நாங்கள் கேட்டோம், அவரை எங்கள் கண்களால் கண்டோம், அவரை உற்றுப்பார்த்தோம், இந்த வார்த்தையாகிய அவரை எங்கள் கைகளால் தொட்டும் பார்த்தோம். உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். நீங்களும் எங்களுடன்கூட ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக, நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியமோ, பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவோடுமே இருக்கிறது. நமது சந்தோஷத்தை முழுநிறைவுபெறச் செய்வதற்காகவே இந்தச் சாட்சியத்தை நாங்கள் எழுதுகிறோம். கிறிஸ்துவிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட செய்தி இதுவே, அதையே உங்களுக்கு அறிவிக்கிறோம்: இறைவன் ஒளியாக இருக்கிறார்; அவரில் எவ்வித இருளும் இல்லை. எனவே, நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், நாம் சத்தியத்தின்படி வாழ்கின்றவர்கள் அல்ல; பொய் சொல்கிறவர்களாகவே இருப்போம். ஆனால், இறைவன் ஒளியில் இருக்கிறதுபோல, நாமும் இறைவனின் ஒளியிலே நடந்தால், நமக்கு ஒருவரோடொருவர் ஐக்கியமுண்டு. இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது. நாம் பாவம் அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வோமேயானால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்; சத்தியம் நமக்குள் இல்லை. நம்முடைய பாவங்களை நாம் இறைவனுக்கு அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பார். ஏனெனில் அவர் வாக்குமாறாதவரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் இறைவனைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தைக்கு நம்முடைய வாழ்க்கையில் இடமில்லை.

1 யோவான் 1:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது. நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம். அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.

1 யோவான் 1:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம். தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது. நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.

1 யோவான் 1:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்