1 கொரிந்தியர் 9:1-27

1 கொரிந்தியர் 9:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ? நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள். என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே. உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ? அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ? எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்? இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா? “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்? நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும். நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ? உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம். ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும். எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும். நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன். அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி. நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன். யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன். மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன். ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள். விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம். ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன். நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.

1 கொரிந்தியர் 9:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா? நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே. என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்: புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா? அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை? எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்? இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ? நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது. நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம். ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா? அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும். நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன். நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன். நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன். பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.

1 கொரிந்தியர் 9:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள். சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை. இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.” தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை. நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன். ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

1 கொரிந்தியர் 9:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா? நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே. என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது: புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை? எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம். ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும். சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன். நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்