1 கொரிந்தியர் 5:1-13

1 கொரிந்தியர் 5:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களிடையே முறைகேடான பாலுறவு இருக்கிறதென்று உண்மையாய் சொல்லப்படுகிறது. அது இறைவனை அறியாதவர் மத்தியிலும் நடவாத ஒன்றாய்க் காணப்படுகிறதே: ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்திருக்கிறான். அப்படியிருந்தும், நீங்களோ பெருமை கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் துக்கப்பட்டு, இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து விலக்கி இருக்கக்கூடாதா? சரீரத்திலே நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களோடிருக்கிறேன். மேலும், நான் அங்கு இருப்பதுபோல் நினைத்து, நமது கர்த்தராகிய இயேசுவின் பெயரினால் இதைச் செய்தவனுக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டேன். நீங்கள் கூடிவரும்பொழுது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கிறேன். நமது கர்த்தராகிய இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கிறது. அத்தகைய, இந்த மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது ஆவியோ இரட்சிக்கப்படும். அப்படியிருக்க, நீங்கள் உங்கள் ஆவிக்குரிய நிலையைக்குறித்து பெருமைகொள்வது நல்லதல்ல. சிறிதளவு புளித்தமாவு, பிசைந்தமாவு முழுவதையும் புளிப்புள்ளதாக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதோ? பழைய புளிப்பூட்டும் மாவை அகற்றிவிட்டு, புளிப்பில்லாத புதிதாய்ப் பிசைந்தமாவாக இருங்கள். உண்மையிலேயே நீங்கள் அப்படிப்பட்டவர்களே. ஏனெனில், நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் பழைய புளிப்பூட்டும் மாவாகிய, தீமையோடும் கொடுமையோடும் அல்லாமல், புளிப்பில்லாத அப்பமாகிய மனத்தூய்மையோடும் உண்மையோடும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவோம். முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப்பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன். இவ்வுலகத்து மக்களை நான் குறிப்பிடவில்லை. விபசாரக்காரர், பேராசையுடையோர், ஏமாற்றுக்காரர், விக்கிரக வழிபாட்டுக்காரர் ஆகியோரை விட்டு விலகுவதென்றால், இவ்வுலகத்தையேவிட்டு போகவேண்டியிருக்குமே. ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுகிறதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொண்டு, முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கிறவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகிறவனாகவோ, குடிவெறியனாகவோ, அல்லது ஏமாற்றுகிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப்பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடனே சாப்பிடவும் கூடாது. திருச்சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா? வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.”

1 கொரிந்தியர் 5:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே. இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன். அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது, அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம். விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது. சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.

1 கொரிந்தியர் 5:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பாலுறவு தொடர்பான பாவங்கள் உங்களிடம் உள்ளன, என்று மக்கள் உண்மையாகவே கூறுகின்றனர். அவை தேவனை அறியாத மக்களிடம் கூட இல்லாத தீய வகையான பாலுறவு தொடர்பான பாவங்கள் ஆகும். ஒருவன் அவனது தந்தையின் மனைவியுடன் உறவு கொண்டிருக்கிறான் என்று மக்கள் கூறுகின்றனர். எனினும் நீங்கள் உங்களைக் குறித்துப் பெருமையடைகின்றீர்கள். அதற்குப் பதிலாக, ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தைச் செய்தவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவேண்டும். என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன். நம் கர்த்தராகிய இயேசுவின் பெயரால் ஒன்று கூடுங்கள், நான் ஆவியில் உங்களோடு இருப்பேன். நம் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை உங்களோடு இருக்கும். இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்படையுங்கள். அப்போது பாவம் நிரம்பிய அவனது சுயம் அழிக்கப்படும். அவனது ஆவியோ கர்த்தர் வரும் நாளில் காக்கப்படும். நீங்கள் தற்பெருமை பாராட்டுவது நல்லதல்ல. உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியும். “சிறிது புளிப்பு மாவானது எல்லா மாவையும் புளிக்கவைக்கும்.” புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார். எனவே நமது பஸ்கா விருந்தை உண்போமாக. ஆனால் புளித்த பழைய மாவைக்கொண்ட அப்பத்தை உண்ணக் கூடாது. புளித்த மாவு பாவத்தையும் தவறுகளையும் குறிக்கும். ஆனால் நாம் புளிக்காத மாவுடைய அப்பத்தை உண்போம். அது நன்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கும் அப்பமாகும். பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன். உலக இயல்பின்படி வாழ்கின்ற மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாது என்று நான் கருதவில்லை. உலக இயல்பின்படியான வாழ்வை உடைய அம்மக்களும் பாலுறவுரீதியாகப் பாவச் செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் சுயநலம் உள்ளவர்களாகவோ, பிறரை ஏமாற்றுபவராகவோ உள்ளனர். அவர்கள் உருவங்களை வணங்குகின்றனர். அவர்களைவிட்டு விலக வேண்டுமானால் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியதிருக்கும். நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாத மக்களை உங்களுக்கு இனம் காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். தன்னைக் கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரனாகக் கூறியும் பாலுறவில் பாவம் செய்கின்றவனுடனும், தன்னலம் பொருந்தியவனுடனும், உருவங்களை வணங்குபவனோடும், மற்றவர்கள் மீது களங்கம் சுமத்துபவனோடும், மது அருந்துபவனோடும், மக்களை ஏமாற்றுகின்றவனோடும் நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ளுதலும் கூடாது. சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.

1 கொரிந்தியர் 5:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்