1 கொரிந்தியர் 3:3-9

1 கொரிந்தியர் 3:3-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள். அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம்.

1 கொரிந்தியர் 3:3-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும். மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.

1 கொரிந்தியர் 3:3-9 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள். அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள்.

1 கொரிந்தியர் 3:3-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.