1 கொரிந்தியர் 3:10-16

1 கொரிந்தியர் 3:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம். ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும். அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும். நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?

1 கொரிந்தியர் 3:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும். நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

1 கொரிந்தியர் 3:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)

சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான். நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.

1 கொரிந்தியர் 3:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்