1 கொரிந்தியர் 2:7-13
1 கொரிந்தியர் 2:7-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
1 கொரிந்தியர் 2:7-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. ஆனால் எழுதியிருக்கிறபடி: “இறைவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டவைகளை, எந்த ஒரு கண்ணும் காணவுமில்லை, எந்த ஒரு காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் சிந்திக்கவுமில்லை.” இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழ்ந்த இரகசியங்களையுங்கூட ஆராய்கிறார். ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள். நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரையே பெற்றுக்கொண்டோம். இதனால் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தவற்றை நாம் விளங்கிக்கொள்கிறோம். ஆகவே இவற்றை நாங்கள் பேசுவது, மனித ஞானம் கற்றுத்தந்த வார்த்தைகளினால் அல்ல, ஆவியானவர் கற்றுத்தந்த வார்த்தைகளினாலேயே நாங்கள் அறிவிக்கிறோம். இவ்விதம் ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரிய வார்த்தைகளால் தெளிவுபடுத்துகிறோம்.
1 கொரிந்தியர் 2:7-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
1 கொரிந்தியர் 2:7-13 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார். இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். ஆனால், “தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிதனும் எண்ணிப் பார்த்ததில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார். ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார். அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம். நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம்.