1 கொரிந்தியர் 15:35-44

1 கொரிந்தியர் 15:35-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம். இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார். உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது. வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது. இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது. அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது.

1 கொரிந்தியர் 15:35-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு. வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்; மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும். சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

1 கொரிந்தியர் 15:35-44 பரிசுத்த பைபிள் (TAERV)

“எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும். என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே. ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார். மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன. வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது. மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும். சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது. “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு. எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு.

1 கொரிந்தியர் 15:35-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்