1 கொரிந்தியர் 15:20-24

1 கொரிந்தியர் 15:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார்.

1 கொரிந்தியர் 15:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

1 கொரிந்தியர் 15:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.

1 கொரிந்தியர் 15:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்