1 கொரிந்தியர் 15:14-19

1 கொரிந்தியர் 15:14-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

1 கொரிந்தியர் 15:14-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே. அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே. ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.

1 கொரிந்தியர் 15:14-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண். மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.

1 கொரிந்தியர் 15:14-19 பரிசுத்த பைபிள் (TAERV)

மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.