1 கொரிந்தியர் 15:1-7

1 கொரிந்தியர் 15:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.

1 கொரிந்தியர் 15:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில், நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால், வீணாகவே நீங்கள் விசுவாசித்தீர்கள். நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து. அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள். பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார்.

1 கொரிந்தியர் 15:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே. நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.

1 கொரிந்தியர் 15:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே, உங்களுக்குக் கூறிய நற்செய்தியை இப்போது நீங்கள் நினைவுகூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இச்செய்தியைப் பெற்றீர்கள். அச்செய்தியில் உறுதியாய்த் தொடருங்கள். நீங்கள் இந்நற்செய்தியால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவற்றை தொடர்ந்து நம்புங்கள். அங்ஙனம் செய்யாத பட்சத்தில் உங்களின் விசுவாசம் வீணாய் போகும். நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார். கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார்.