1 கொரிந்தியர் 14:20-25

1 கொரிந்தியர் 14:20-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். மறுபாஷைக்காரராலும், மறு உதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.

1 கொரிந்தியர் 14:20-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் சிந்திப்பதை நிறுத்துங்கள். தீய செயல்களைப் பொறுத்தமட்டில் குழந்தைகளைப்போல களங்கமற்று இருங்கள். ஆனால் உங்கள் சிந்திக்கும் ஆற்றலிலே வளர்ச்சியடைந்தவர்களாய் இருங்கள். “வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களைக்கொண்டும், புரியாத உதடுகளைக்கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்பொழுதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், என்று கர்த்தர் சொல்கிறார்” என மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதே. எனவே, வேற்று மொழிகளைப் பேசுவது, அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்குரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அது அவிசுவாசிகளுக்கு அல்ல. எனவே திருச்சபையோர் எல்லோரும் கூடிவரும்போது, எல்லோரும் வேற்று மொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற ஆவிக்குரிய வரங்களைப் பற்றி விளக்கமில்லாதவர்களும், அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து, நீங்கள் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டார்களா? ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும். அப்பொழுது அவனுடைய இருதயத்தின் இரகசியம் எல்லாம் வெளியாகும். எனவே அவன், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார்!” என்று அறிக்கையிடுவான்.

1 கொரிந்தியர் 14:20-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள். மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா? எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.

1 கொரிந்தியர் 14:20-25 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள். “வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும், வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன். அப்போதும் இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார். எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான்.