1 கொரிந்தியர் 13:4-13

1 கொரிந்தியர் 13:4-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 கொரிந்தியர் 13:4-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது. அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும். அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும். அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும். ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது. ஆனால் முழுநிறைவு வரும்போது, முழுநிறைவற்றது மறைந்துபோகும். நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம்; அப்பொழுதோ, நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறேன்; அப்பொழுதோ, நான் முழுமையாக அறிந்துகொள்வேன். நான் அறிந்துகொள்கிறபடியே முழுமையாக அறிந்து கொள்ளப்படுவேன். ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது.

1 கொரிந்தியர் 13:4-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும். அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும். நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 கொரிந்தியர் 13:4-13 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும். அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும். நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.

1 கொரிந்தியர் 13:4-13

1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI1 கொரிந்தியர் 13:4-13 TAOVBSI