1 கொரிந்தியர் 13:1-7
1 கொரிந்தியர் 13:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன். நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை. எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது. அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும். அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும்.
1 கொரிந்தியர் 13:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் இப்போது மிகச் சிறந்த வழியைக் காட்டுவேன். மனிதர்களுடையதும், தேவ தூதர்களுடையதுமான வெவ்வேறு மொழிகளை நான் பேசக்கூடும். ஆனால் என்னிடம் அன்பு இல்லையானால் நான் சப்தமிடும் மணியைப் போலவும், தாளமிடும் கருவியைப் போலவும் இருப்பேன். தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் எனக்கு இருக்கலாம். தேவனுடைய இரகசியமான காரியங்களை நான் உணர்ந்துகொள்ளக் கூடும். எல்லாம் அறிந்திருக்கக்கூடும். மலைகளை அசைக்க வல்ல அரிய விசுவாசம் எனக்கு இருக்கக் கூடும். ஆனால் இவையிருந்தும் என்னிடம் அன்பு இல்லையானால் மேற்கண்ட செய்கைகளைச் செய்வதால் எனக்கு எவ்வித பயனுமில்லை. மக்களுக்கு உணவுகொடுக்க என்னிடமிருக்கிற ஒவ்வொன்றையும் நான் கொடுக்கலாம். என் சரீரத்தையே கூட காணிக்கைப் பொருளாகக் கொடுக்கலாம். ஆனால் என்னிடம் அன்பு இல்லையென்றால் இக்காரியங்களைச் செய்வதன் மூலம் எனக்கு எவ்வித லாபமும் இல்லை. அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.
1 கொரிந்தியர் 13:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.