1 கொரிந்தியர் 11:17-34

1 கொரிந்தியர் 11:17-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்வரும் விஷயத்தில் நான் உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரைகளில், நான் உங்களைப் புகழப் போகிறதில்லை, ஏனெனில் உங்கள் ஒன்றுகூடுதல் நன்மையைவிட தீமையையே விளைவிக்கின்றன. முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன். உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும். நீங்கள் ஒன்றுகூடி வந்து, சாப்பிடுவது உண்மையில் கர்த்தருடைய திருவிருந்து அல்ல. நீங்கள் சாப்பிடும் வேளையில், மற்றவருக்காகக் காத்திராமல் சாப்பிடுகிறீர்கள். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றவர்கள் குடித்து வெறிக்கிறார்கள். சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக்குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனோ? நிச்சயமாக இல்லை. கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார். ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம். அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம். ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.

1 கொரிந்தியர் 11:17-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே. முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான். இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே. சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும். ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.

1 கொரிந்தியர் 11:17-34 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும். நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை உண்மையாகப் புசிப்பதில்லை. ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன். நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள். எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார். சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.

1 கொரிந்தியர் 11:17-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே. முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான். இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே. புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.