1 நாளாகமம் 28:1-6
1 நாளாகமம் 28:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான். அப்பொழுது அரசன் தாவீது எழுந்து நின்று, “எனது சகோதரரே, எனது மக்களே, எனக்கு செவிகொடுங்கள். நான் ஒரு வீட்டைக் கட்டி அதை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கான தங்குமிடமாகவும், இறைவனின் பாதபடியாகவும் செய்ய என் மனதில் நினைத்திருந்தேன். அதைக் கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் இறைவன் என்னிடம், ‘என்னுடைய பெயருக்கான ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல; ஏனெனில் நீ இரத்தம் சிந்திய இராணுவவீரனாயிருக்கிறாய்’ என்றார். “ஆயினும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்றென்றைக்கும் இஸ்ரயேலின் அரசனாயிருக்கும்படி, எனது முழுக் குடும்பத்திலிருந்தும் என்னையே தேர்ந்தெடுத்தார். அவர் யூதாவைத் தலைமையாகத் தெரிந்துகொண்டார். யூதா கோத்திரத்திலிருந்து எனது குடும்பத்தை தெரிந்தெடுத்தார். அதோடு எனது தகப்பனின் மகன்களுக்குள் என்னையே இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்க பிரியங்கொண்டார். யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தார். ஆனாலும் அவர்களெல்லோரிலும் எனது மகன் சாலொமோனையே இஸ்ரயேலின்மேல் யெகோவாவினுடைய அரசாட்சியின் அரியணையில் அமரும்படி தெரிந்துகொண்டார். அவர் என்னிடம், ‘உனது மகன் சாலொமோனே எனக்கு ஆலயத்தையும், ஆலயமுற்றங்களையும் கட்டப்போகிறவன். ஏனெனில், அவனை நான் எனது மகனாக தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன்.
1 நாளாகமம் 28:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கோத்திரங்களின் தலைவர்களும், ராஜாவுக்கு பணிவிடை செய்கிற வகுப்புகளின் தலைவர்களும், ஆயிரம்பேர்களுக்கு தலைவர்களும், நூறுபேர்களுக்கு தலைவர்களும், ராஜாவுக்கும் ராஜாவின் மகன்களுக்கும் உண்டான எல்லா சொத்தையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவர்களுமாகிய இஸ்ரவேலின் எல்லா பிரபுக்களையும், முதன்மையானவர்களையும், பெலசாலிகளையும், எல்லா பெலசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான். அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதப்படியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன். ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார். இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாக இருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னுடைய தகப்பனுடைய வீட்டார்களில் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என்னுடைய தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என்னுடைய தகப்பனுடைய மகன்களுக்குள் என்மேல் பிரியம் வைத்தார். யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் யெகோவாவுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு, அவர் என்னுடைய எல்லா மகன்களிலும் என்னுடைய மகனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு, அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்.
1 நாளாகமம் 28:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், ராஜாவின் படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். ராஜாவுக்கும் அவனது குமாரர்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான். தாவீது எழுந்து நின்று அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் ராஜாவாக்க விரும்பினார்! கர்த்தர் எனக்கு பல குமாரர்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய ராஜாவாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன்.
1 நாளாகமம் 28:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான். அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன். ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார். இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என் தகப்பனுடைய வீட்டாரிலெல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார். கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு, அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு, அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.