1 நாளாகமம் 22:1-9

1 நாளாகமம் 22:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான். பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான். தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான். அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான். பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய். ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன்.

1 நாளாகமம் 22:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான். தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான். அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய். இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன்.

1 நாளாகமம் 22:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான். தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர். தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் குமாரன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான். பிறகு தாவீது தன் குமாரன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. ஆனால் உனக்கு ஒரு குமாரன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது குமாரனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் ராஜாவாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன்.

1 நாளாகமம் 22:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான். பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய ஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான். தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும், எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும், தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம் பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்து வைத்தான். அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன். ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப்பண்ணினாய்; நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய். இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும்; அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்.