1 நாளாகமம் 21:18-30

1 நாளாகமம் 21:18-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவாவின் தூதன், எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதுக்கு சொல் என காத்திற்குக் கட்டளையிட்டார். எனவே யெகோவாவின் பெயரால் காத் கூறியவற்றிக்குத் தாவீது கீழ்ப்படிந்தான். அந்நேரத்தில் ஒர்னான் கோதுமையை சூடடித்துக் கொண்டிருந்தான். ஒர்னான் திரும்பிப் பார்த்தபோது தூதனைக் கண்டான்; அவனோடிருந்த அவனுடைய நான்கு மகன்களும் ஒளிந்துகொண்டனர். தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் கண்டபோது, உடனே அவன் சூடடிக்கும் களத்தை விட்டுப்போய் தாவீதுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தாவீது ஒர்னானிடம், “கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படியாக, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்கு உன்னுடைய சூடடிக்கும் களத்தை கொடு. அதன் முழு விலையையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான். அதற்கு ஒர்னான் தாவீதிடம், “எனது தலைவனாகிய அரசர் அதை எடுத்து அவரது விருப்பப்படியெல்லாம் செய்வாராக. நான் தகனபலிக்குக் காளையையும், விறகிற்கு மரத்தாலான சூடடிக்கும் உருளைகளையும், தானிய காணிக்கைக்காக கோதுமையையும் தருவேன். இவை எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றான். ஆனால் தாவீது அரசன் ஒர்னானிடம், “அப்படியல்ல, நான் முழு விலையையும் தருவேன். நான் யெகோவாவுக்கு உன்னிடத்திலிருந்து உன்னுடைய எதையும் எடுக்கவோ, நான் செலவு செய்யாமல் ஒரு காணிக்கையைப் பலியிடவோ மாட்டேன்” என்றான். எனவே, தாவீது அந்த இடத்தின் மதிப்புக்குரிய அறுநூறு சேக்கல் நிறையுள்ள தங்கத்தை ஒர்னானுக்குக் கொடுத்தான். அங்கே தாவீது அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். அவன் யெகோவாவைக் கூப்பிட்டான். அப்போது யெகோவா வானத்திலிருந்து நெருப்பை தகனபலிபீடத்தில் இறங்கப்பண்ணி அவனுக்குப் பதிலளித்தார். அப்போது யெகோவா தூதனிடம் பேசினார். அவன் தனது வாளை உறையில் போட்டான். அந்த நேரத்தில் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் தனக்கு யெகோவா பதிலளித்ததால், தாவீது அங்கேயே பலிகளைச் செலுத்தினான். மோசே பாலைவனத்தில் கட்டிய யெகோவாவின் கூடாரமும், தகன பலிசெலுத்தும் பலிபீடமும் அந்நாட்களில் கிபியோனின் மேட்டில் இருந்தது. யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படி அந்த பலிபீடத்திற்குமுன் போகமுடியவில்லை.

1 நாளாகமம் 21:18-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான். ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான். அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான். ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல், தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார். எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான். மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.

1 நாளாகமம் 21:18-30 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம், கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஒர்னானின் களத்துக்குப் போனான். ஒர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஒர்னானின் நான்கு குமாரர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். தாவீது ஒர்னாவிடம் சென்றான், ஒர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான். தாவீது ஒர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான். ஒர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது ராஜா, மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான். ஆனால் தாவீது ராஜா, “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஒர்னாவிடம் கூறினான். எனவே தாவீது ஒர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார். ஒர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.

1 நாளாகமம் 21:18-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான். ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான். அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான். ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். அதற்குத் தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல், தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார். எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே கண்டு அங்கேதானே பலியிட்டான். மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.