1 நாளாகமம் 21:1-17

1 நாளாகமம் 21:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான். எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான். ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான். ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான். யோவாப் தாவீதிடம் போர்செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தான். இஸ்ரயேலில் வாளேந்தும் வீரர்கள் பதினொரு இலட்சம்பேரும், யூதாவில் நாலு இலட்சத்து எழுபதாயிரம்பேரும் இருந்தனர். அரசனின் கட்டளை யோவாபுக்கு வெறுப்பூட்டியதனால், அவன் லேவியரையும், பென்யமீனியரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார். அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான். யெகோவா தாவீதின் தரிசனக்காரனான காத்திடம், “நீ போய் தாவீதிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உனக்கு மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன். நான் உனக்கு எதிராகச் செயல்படுத்தும்படி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார். எனவே காத் தாவீதிடம்போய், “யெகோவா சொல்வது இதுவே: யெகோவா உனக்குமுன் வைக்கும் இந்த மூன்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள். அதாவது, மூன்று வருடங்கள் பஞ்சம் வரும்; அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளினால் துரத்தப்பட்டு, அவர்களுடைய வாள் உங்களை மேற்கொள்ளும்; அல்லது மூன்று நாட்கள் யெகோவாவின் வாள், கொள்ளைநோயான இது இஸ்ரயேலின் ஒவ்வொரு பகுதியிலும் யெகோவாவின் வாளேந்தும் தூதனால் அழிவாக வரும். எனவே இப்பொழுது என்னை அனுப்பினவருக்கு நான் பதில்சொல்வதற்கு நீ தீர்மானித்துச் சொல்” என்றான். தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன்; யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். எனவே யெகோவா இஸ்ரயேலில் கொள்ளைநோயை வரப்பண்ணினார். அதனால் எழுபதாயிரம் இஸ்ரயேல் மக்கள் இறந்தனர். அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான். தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர். தாவீது இறைவனிடம், “இராணுவவீரரைக் கணக்கிடும்படி கட்டளையிட்டவன் நான் அல்லவா? செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? என் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும். இந்தக் கொள்ளைநோய் உமது மக்கள்மேல் இராதபடி செய்யும்” என மன்றாடினான்.

1 நாளாகமம் 21:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான். யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து, போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள். ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார். தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான். அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி, நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான். தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான்.

1 நாளாகமம் 21:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான். ஆனால் யோவாப், “இப்போது இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது ராஜாவும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான். ஆனால், தாவீது ராஜாவோ உறுதியாக இருந்தான். ராஜா சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 11,00,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது ராஜாவின் கட்டளையை விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார். பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான். காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார். பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான். தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான். எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தருகில் நின்றான். கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.

1 நாளாகமம் 21:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான். யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து, ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள். ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி, நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள். எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான். தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்