1 நாளாகமம் 16:8-36
1 நாளாகமம் 16:8-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி சொன்னதாவது: “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள். நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன. நாடுகளின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள். அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள். பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசையாது. வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும். கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்! காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும், அவை யெகோவாவுக்கு முன்பாக மகிழ்ந்து பாடட்டும், ஏனெனில் யெகோவா பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள்.
1 நாளாகமம் 16:8-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள். அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்குக் கொடுத்த ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குக் கட்டளையாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்திரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். பூமியின் எல்லா குடிமக்களே, யெகோவாவைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவியுங்கள். தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே. அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதை செலுத்துங்கள். யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக. கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;” அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.”
1 நாளாகமம் 16:8-36 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்! கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள். கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட. இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள். யாக்கோபின் சந்ததியினர், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தர் நமது தேவன், அவரது வல்லமை எங்கும் உள்ளது. அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார். கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள், அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட. கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார், இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும். கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன். வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.” அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர். அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்; அவர்களைப் புண்படுத்தாதபடி ராஜாக்களை எச்சரித்தார். கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும் எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.” கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும் நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும். கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள், எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள். கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர். ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்! வலிமையும், மகிழ்ச்சியும் கர்த்தர் வசிக்கும் இடத்தில் உள்ளன. கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர். குடும்பங்களே, ஜனங்களே கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள். கர்த்தருடைய மகிமையைத் துதியுங்கள், அவரது பெயருக்கு மரியாதை செலுத்துங்கள், கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வாருங்கள், கர்த்தரை பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது! ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது. பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும், “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொருவரும் எங்கும் சொல்லட்டும். கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்! வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்! கர்த்தருக்கு முன்னால் காட்டு மரங்களும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்! ஏனென்றால், கர்த்தர் வந்துக்கொண்டிருக்கிறார். உலகை நியாயந்தீர்க்க அவர் வருகிறார். ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக. கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே, எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம். பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர், அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்!
1 நாளாகமம் 16:8-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும். அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். அவர்களையொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு, நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக. சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக. அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.