1 நாளாகமம் 16:26-43

1 நாளாகமம் 16:26-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன. நாடுகளின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள். அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள். பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசையாது. வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும். கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்! காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும், அவை யெகோவாவுக்கு முன்பாக மகிழ்ந்து பாடட்டும், ஏனெனில் யெகோவா பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள். பின்பு தாவீது ஆசாப்பையும், அவனுடைய உதவியாளர்களையும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னே, அன்றாட தேவைகளுக்கேற்றபடி ஒழுங்காகப் பணிசெய்யும்படி விட்டான். அவர்களோடு சேர்த்து ஓபேத் ஏதோமையும், அவனுடைய உதவியாளர்கள் அறுபத்தெட்டுபேரையும் பணிசெய்யும்படி விட்டான். எதுத்தூனின் மகன் ஓபேத் ஏதோமும் அவனோடு ஓசாவும் வாசல் காவலர்களாக இருந்தார்கள். தாவீது ஆசாரியன் சாதோக்கையும் அவனுடைய உதவி ஆசாரியர்களையும், கிபியோனிலுள்ள உயர்ந்த மேட்டிலே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்திற்கு முன்பாக விட்டான். இஸ்ரயேலுக்கு யெகோவா எழுதிக்கொடுத்த சட்டத்தின்படியெல்லாம், காலையிலும் மாலையிலும் ஒழுங்காக பலிபீடங்களில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தும்படி இவர்கள் எல்லோரையும் விட்டான். அவர்களோடு ஏமானும், எதுத்தூனும், பெயரின்படி தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட மற்றவர்களும், “அவரது அன்பு என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி இருந்தார்கள். இறைவனைப் பாடும் பரிசுத்த பாடல்களுக்காக எக்காளங்களையும் கைத்தாளங்களையும் ஒலிக்கவும், மற்ற வாத்தியங்களை மீட்டவும் ஏமானும் எதுத்தூனும் பொறுப்பாக இருந்தார்கள். எதுத்தூனின் மகன்கள் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். பின்பு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள், தாவீது தன் குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்காக தன் வீட்டிற்குப் போனான்.

1 நாளாகமம் 16:26-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவருடைய சமூகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவருடைய ஸ்தலத்தில் இருக்கிறது. மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதை செலுத்துங்கள். யெகோவாவுக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் நுழையுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக. கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக. அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாகக் காட்டுமரங்களும் முழக்கமிடும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது. எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக;” அதற்கு மக்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லிக் யெகோவாவை துதித்தார்கள்.” பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து, எதித்தூனின் மகனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக, அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களையும் வைத்து, இவர்களோடு ஏமானையும், எதித்தூனையும், பெயர்பெயராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும், பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

1 நாளாகமம் 16:26-43 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்! வலிமையும், மகிழ்ச்சியும் கர்த்தர் வசிக்கும் இடத்தில் உள்ளன. கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர். குடும்பங்களே, ஜனங்களே கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள். கர்த்தருடைய மகிமையைத் துதியுங்கள், அவரது பெயருக்கு மரியாதை செலுத்துங்கள், கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வாருங்கள், கர்த்தரை பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது! ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது. பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும், “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொருவரும் எங்கும் சொல்லட்டும். கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்! வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்! கர்த்தருக்கு முன்னால் காட்டு மரங்களும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்! ஏனென்றால், கர்த்தர் வந்துக்கொண்டிருக்கிறார். உலகை நியாயந்தீர்க்க அவர் வருகிறார். ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக. கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே, எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம். பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர், அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்! அனைத்து ஜனங்களும் கர்த்தரைத் துதித்து, “ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு தாவீது, ஆசாப்பையும் அவனது சகோதரர்களையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் விட்டுவிட்டு வந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெட்டிக்கு முன்பு சேவைச் செய்ய வைத்தான். தாவீது, அங்கே ஆசாப்பு மற்றும் அவன் சகோதரர்களோடு ஓபேத்ஏதோமையும் 68 லேவியர்களையும் சேவைச் செய்ய விட்டு, விட்டு வந்தான். ஓபேத்ஏதோமும் ஓசாவும் வாசல் காவல்காரர்கள். ஓபேத்ஏதோம் எதித்தூனின் குமாரன் ஆவான். கிபியோனிலுள்ள மேட்டில் இருக்கிற கர்த்தருடைய கூடாரத்தில் சேவை செய்வதற்காக தாவீது சோதாக்கையும் மற்ற ஆசாரியர்களையும் விட்டு வைத்தான். ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் சோதாக்கும், மற்ற ஆசாரியர்களும் பலிபீடத்தில் சர்வாங்கதகன பலிகளைக் கொடுத்தனர். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எழுத்தின் மூலமாக வழங்கிய சட்டத்தின்படி அவர்கள் செய்தார்கள். ஏமானையும், எதித்தூனையும், மற்ற லேவியர்களையும் கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்காகத் தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால், கர்த்தருடைய அன்பு என்றும் தொடர்ந்திருக்கும் போன்ற பாடல்களை பாட ஏமானும், எதித்தூனும் அவர்களோடு இருந்தனர். அவர்களின் வேலை எக்காளத்தை ஊதுவதும், கைத்தாளம் இடுவதும் ஆகும். தேவனுக்காக பாடல்கள் பாடப்பட்டபோது அவர்கள் வேறு இசைக் கருவிகளையும் இசைத்து வந்தனர். எதித்தூனின் குமாரர்கள் வாசலைக் காத்தனர். விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.

1 நாளாகமம் 16:26-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக. சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக. அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள். பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து, எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்கதகன பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக, அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து, இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும், பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்