1 நாளாகமம் 16:1-11

1 நாளாகமம் 16:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள். தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான். பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான். அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான். அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள். அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே: யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.

1 நாளாகமம் 16:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து, ஆண்கள்துவங்கி பெண்கள்வரை, இஸ்ரவேலர்களாகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கொண்டாடித் துதித்துப் புகழுவதற்குக் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பணிவிடை செய்யும்படி லேவியர்களில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாக இருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களை தட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே யெகோவாவுக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது. யெகோவாவை துதித்து, அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துங்கள்; அவருடைய செயல்களை மக்களுக்குள்ளே பிரபலப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவருடைய சமுகத்தை அனுதினமும் தேடுங்கள்.

1 நாளாகமம் 16:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர். தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன், ஒரு துண்டு அப்பத்தையும், இறைச்சி துண்டையும் உலர்ந்த திராட்சைகளையும், எல்லா இஸ்ரவேலிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொடுத்தான். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான். கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள், ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள். கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள், அவரது அதிசயங்களையும் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்! கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள், எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள்.

1 நாளாகமம் 16:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து, புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான். அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும், பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.