ரூத் 2:11-23

ரூத் 2:11-23 TAOVBSI

அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது. அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள். பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள். அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள். அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.