சங்கீதம் 104:10-24

சங்கீதம் 104:10-24 TAOVBSI

அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும். தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாரு விருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம். சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். பாலசிங்கங்கள் இரைக்காகக் கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும். சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான். கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.