எண்ணாகமம் 20:2-12

எண்ணாகமம் 20:2-12 TAOVBSI

ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.