எண்ணாகமம் 15:22-41

எண்ணாகமம் 15:22-41 TAOVBSI

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல், அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும். ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன். அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும். இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும். அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும். நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக. நான் உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.