எண்ணாகமம் 14:1-9

எண்ணாகமம் 14:1-9 TAOVBSI

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.