பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,
மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள்.
அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.
பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.