தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
யோவான் வனாந்தரத்தில் ஞான ஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.
அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,
உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.