மத்தேயு 27:1-26

மத்தேயு 27:1-26 TAOVBSI

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள். பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.