மத்தேயு 26:1-25

மத்தேயு 26:1-25 TAOVBSI

இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள். இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள், தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.