மத்தேயு 22:23-46

மத்தேயு 22:23-46 TAOVBSI

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்? இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.