லூக்கா 23:26-49

லூக்கா 23:26-49 TAOVBSI

அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 23:26-49 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்