லூக்கா 13:10-17

லூக்கா 13:10-17 TAOVBSI

ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.