லேவியராகமம் 26:23-38

லேவியராகமம் 26:23-38 TAOVBSI

நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து, என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள். இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன். உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள். நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும். நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள். ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும். நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறது போல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள். துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது. புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.