யோபு 9:13-35

யோபு 9:13-35 TAOVBSI

தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன். நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன், அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார். பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன். ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார். உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார். என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம். அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால், என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன். நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன? நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும், நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும். நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே. அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக. அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோபு 9:13-35