யோபு 5:17-27

யோபு 5:17-27 TAOVBSI

இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார். நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர். பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர். வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும். உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர். உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர். தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.