யோபு 1:1-12

யோபு 1:1-12 TAOVBSI

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோபு 1:1-12