யோவான் 9:24-41

யோவான் 9:24-41 TAOVBSI

ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

தொடர்புடைய காணொளிகள்