எரேமியா 32:6-15

எரேமியா 32:6-15 TAOVBSI

அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்வான் என்று உரைத்தார். அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன். ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு, நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை. ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.