ஏசாயா 24:16-23

ஏசாயா 24:16-23 TAOVBSI

நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன். தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோகும், இனி எழுந்திராது. அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.