ஆதியாகமம் 42:1-17

ஆதியாகமம் 42:1-17 TAOVBSI

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்