ஆதியாகமம் 41:1-40

ஆதியாகமம் 41:1-40 TAOVBSI

இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களண்டையிலே நின்றது. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம் விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான். காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று. அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான், பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக, அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக. தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான். இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்