ஆதியாகமம் 38:11-19

ஆதியாகமம் 38:11-19 TAOVBSI

அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்தது போலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.