ஆதியாகமம் 18:16-33

ஆதியாகமம் 18:16-33 TAOVBSI

பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்த பின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.