யாத்திராகமம் 4:10-23

யாத்திராகமம் 4:10-23 TAOVBSI

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம் மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார். மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான். பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார். அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான். அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.