யாத்திராகமம் 4:1-17

யாத்திராகமம் 4:1-17 TAOVBSI

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்ற சதையைப்போலாயிற்று. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம் மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்