யாத்திராகமம் 12:39-51

யாத்திராகமம் 12:39-51 TAOVBSI

எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க இராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய இராத்திரி இதுவே. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.