யாத்திராகமம் 12:23-51

யாத்திராகமம் 12:23-51 TAOVBSI

கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள். கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான். எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள். பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள். மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாகப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க இராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய இராத்திரி இதுவே. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யாத்திராகமம் 12:23-51